Tuesday, March 24, 2009

தயிர் சாதம் (மார்கழி 28)

மார்கழி 28ஆம் நாள் செய்யும் சாதம். (”கறவைகள் பின்சென்று…..”)

தேவையான பொருள்கள்:

அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
பால் - 5 கப்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 2 டேபிள்ஸ்பூன். (விருப்பமானால்)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க - எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை…

thayir saadham (maarkazhi 28)

செய்முறை:

  • அரிசியைக் களைந்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • 2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
  • சூட்டோடு திறந்து, உப்பு, தயிர் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து, சூடான பால் சேர்த்து தளரக் கலக்கவும்.
  • 5 நிமிடங்கள் க்ழித்துத் திறந்தால் சாதம் இறுகியிருக்கும். இன்னும் சிறிது சூடான பால் சேர்த்து மூடி வைக்கவும்
  • மீண்டும் 5 நிமிடங்களில் நிறைய பால், வெண்ணை சேர்த்து மிக மிகத் தளர்வான பதத்தில்* கலக்கவும். அப்போதுதான் சாப்பிடும் நேரத்தில் சரியான பதத்தில் இருக்கும்.
  • எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைக்கவும்.
  • இந்தத் தயாரிப்பை இரண்டு மணிநேரங்களில் சாப்பிடச் சரியாக இருக்கும். அதற்குமுன் சாப்பிட வேண்டிவந்தால் இன்னும் சிறிது தயிர்சேர்த்து உபயோகிக்கலாம்.

* கலக்கும்போது சரியான பதத்தில் கலந்துவிட்டு சாப்பிடும்போது இறுகியிருப்பதற்காக மீண்டும் தயிரோ, பாலோ சேர்த்துத் தளர்த்தினால் அது சுவையாக இருக்காது.

* தேவைப்பட்டால் கேரட், வெள்ளரியைத் துருவி பரிமாறும் நேரத்தில் சேர்க்கலாம். அல்லது கொட்டை இல்லாத பச்சை திராட்சையையும் சேர்க்கலாம்.

* சாப்பிட இன்னும் 4 மணி நேரங்களுக்கு மேல் ஆகுமென்றால் உபயோகிக்கும் பால் மிதமான சூட்டிலும், மிக அதிக நேரம் ஆகுமென்றால் (பயணங்களுக்கு எடுத்துப் போவது) முற்றிலும் ஆறிய பாலையே உபயோகிக்க வேண்டும். சாதமும் சற்று சூடு ஆறியபின் கலக்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் சீக்கிரம் புளித்துவிடும்.

* சாதத்தில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிச் சேர்ப்பது வெகுநேரத்திற்கு புளிக்காமல் இருக்க உதவும்.

* தாளிக்கும் எண்ணை மிகமிக லேசானதாக, ஏற்கனவே உபயோகிக்காததாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாலும் வெண்ணையுமே சுவையைக் கூட்டும் என்பதால் கடுகு நனையும் அளவு எண்ணையில் தாளித்தால் போதுமானது. அதிகமான அல்லது கலங்கலான எண்ணை மொத்த தயிர்சாதத்தின் நிறத்தை மட்டுப்படுத்திவிடும் அல்லது கெடுத்துவிடும்.

தயிர்சாதம் குறித்த மேலும் இரு குறிப்புகள் :)
http://www.maraththadi.com/article.asp?id=429
http://www.maraththadi.com/article.asp?id=2029

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சொல்லி மாளுமா என்று தெரியவில்லை. வக்கணையாக செய்யப்பட்ட தயிர்சாதத்தை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் முதல் கட்டமாக சிலவற்றைச் சொல்லலாம். ஆவக்காய், எலுமிச்சை இதர ஊறுகாய் வகைகள், சாம்பார், குழம்பு, காய், கூட்டு, துவையல்… எல்லாவற்றையும் முந்திக் கொண்டு மாவடு. இன்னும் முக்கியமாக வேறு எதனோடும் சேராமல் அல்லது தயிர்சாதத்திற்கென்றே பிரத்யேகமாக ஜீவித்திருப்பது மோர்மிளகாய். எனக்குத் தெரிந்து வீட்டைத் தவிர ஹோட்டல்களில் சரவண பவனுக்குத்தான் இதில் முதலிடம். குறிப்புகள் இனி வரும்.

வாழைப்பூ கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்முன் கொஞ்சம் சொந்தக் கதை. வாழைப்பூ வாங்கி உரிக்கும் நாளிலெல்லாம் எங்களுக்கு பாட்டி சாதம் பிசைந்து கையில் போடுவார். கைக்கு அடியில் வாழைப்பூவின் மடலில் ஊறுகாயை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டால்(மாவடுவாக இருந்தால் ஒரு கடி கடித்து வாயிலேயே வைத்துக் கொள்ளலாம்.), அதில் பாட்டி சாதத்தைப் போட, அது பாட்டுக்கு அளவில்லாமல் உள்ளே இறங்கும்.

மசித்த கீரையில் வத்தக்குழம்பு கலந்த கலவை தயிர் சாதத்தோடு சுவையில் பல எல்லைகளைத் தொடும். பாட்டி வலதுகையால் சாதத்தைக் கையில் போட, நாங்கள் கட்டைவிரலால் அதில் நடுவில் குழித்துக் கொண்டால், இடதுகையால் ஒரு ஸ்பூனில் கீரைக் கலவையை பாட்டி அதில் விட, நாங்கள் சாப்பிட… சொல்ல மறந்த முக்கிய விஷயம், முதல்நாள் கைகளில் மருதாணி இட்டு அழித்திருந்தால் (கடைகளில் வாங்கிய பொடியாக இல்லாமல், பசுமையான இலையை அரைத்து இட்டிருக்க வேண்டும்) அதற்காக இந்திர லோகத்தையே எழுதிவைக்கலாம். வாயருகே சாதத்தைக் கொண்டுவரும் போதெல்லாம், அந்த வாழைப்பூ மடல், தயிர்சாதம், கீரை, வத்தக்குழம்புடன் மருதாணியின் கலவையான வாசனைக்கும் சுவைக்கும் பாட்டியின் வாஞ்சையும் சேர்ந்து, என்னைக் கேட்டால், உலகின் மிகச் சிறந்த மேட்ச் ஃபிக்சிங் இதுதான்.

0 comments:

Post a Comment