Tuesday, March 24, 2009

புளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)

”தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”

ரா.கி.ரங்கராஜன் (நாலு மூலை)

ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.

கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 5 கப்
நல்லெண்ணை - 50 கிராம்
மிளகு - 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி - 100 கிராம்
நல்லெண்ணை - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
கடுகு - 10 கிராம்
பெருங்காயம் - சிறிது
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் - 10 கிராம்

செய்முறை:

  • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
  • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

0 comments:

Post a Comment